கடலூர்: மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற கண்காணிப்பு அலுவலர் கைது

By ந.முருகவேல்

கடலூர்: தனியார் பள்ளிகளுக்கான கடலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற கண்காணிப்பு அலுவலரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏழை எளிய மாணவர்கள் 1 முதல் 8-ம் வரை பயின்று வருகின்றனர். அவ்வாறு பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்கி வருகிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை வழங்கும் தனியார் பள்ளிகள், அதற்குரிய சான்றுகளை, ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்து, அந்தத் தொகையை பெற முடியும்.

அவ்வாறு சேர்க்கை வழங்கும் பள்ளி நிர்வாகத்தினர், தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர், கண்காணிப்பாளர் ஆகியோரின் செல்வாக்கு இருந்தால் மட்டுமே, அரசு வழங்கும் கட்டணங்களை உரிய காலத்தில் முழுத் தொகையும் பெற முடியும் என்ற நிலை பல இடங்களில் உள்ளது.

இந்த நிலையில் தான், கடலூர் முதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் உயர் நிலைப் பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை விடுவிக்க, தனியார் பள்ளிகளுக்கான கடலூர் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கணேசனை, அந்த தனியார் பள்ளியின் உரிமையாளர் பாலசண்முகம் அணுகியுள்ளார்.

அவரிடம் `ரூ.25 ஆயிரம் கொடுத்தால் தான் கோப்புகள் நகரும்’ என கணேசன் கூறியதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலசண்முகம், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில், நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், பாலசண்முகத்திடம் சில ஆலோசனைகளை வழங்கி, அதன்படி செயல்பட அறிவுறுத்தினர்.

அதன்படி இன்று தனியார் பள்ளிகளுக்கான கடலூர் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கணேசனை, பாலசண்முகம் சந்தித்து ரூ.25 ஆயிரத்தை வழங்கியுள்ளார். அப்போது அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த டிஎஸ்பி-யான சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், கணேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE