மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 கோடி மோசடி - பாதிக்கப்பட்டோர் புகார்

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ரூ. 4 கோடி வரையிலும் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக மதுரை மாவட்டம் பாலமேடு பழையபட்டி புதூர் பழனிச்சாமி, உசிலம்பட்டி அழகுராஜா, பெருங்குடி பழனிவேல், சுரேஷ் உள்ளிட்டோர் மதுரை காவல் ஆணையர் லோகநாதனிடம் இன்று அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: "மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர் முக்கிய அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பதாகவும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் எங்களை அணுகி ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பி எங்களது மகன்களுக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரி கவுதமிடம் கடந்த 2022-ல் தலா ரூ. 12 லட்சத்திற்கு மேல் பணம் கொடுத்தோம். அதன்பின், ஒரு சிலருக்கு கல்வித் துறையில் பணி நியமனத்திற்கான உத்தரவு கடிதங்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகி பணியில் சேர முயன்றபோது, அவர் வழங்கிய உத்தரவு நகல், அடையாள அட்டைகள் போலி எனத் தெரியவந்தது.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கவுதம், எங்களிடம் மட்டுமின்றி மேலும், சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடமும் இதேபோல் ஆசை வார்த்தை கூறி ரூ.4 கோடி வரையிலும் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE