ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2.7 கிலோ கஞ்சா, 13 மூட்டை குட்கா பறிமுதல் 

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2.7 கிலோ கஞ்சா, 13 மூட்டை குட்காவை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், இது தொடர்பாக தர்மலிங்கம் என்பவரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான அவரது அண்ணன் முத்துகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விருதுநகர் எஸ்பி-யான கண்ணன் உத்தரவில் டிஎஸ்பி-யான ராஜா மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் கிருஷ்ணன்கோவில் போக்குவத்து நகரில் உள்ள வீட்டில் இருந்த கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்த வீட்டில் இருந்த பொன்னுச்சாமி மகன் தர்மலிங்கம் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் எம்.புதுப்பட்டியில் உள்ள பயன்பாடில்லாத பொது சுகாதார வளாகத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கு சோதனை நடத்திய தனிப்படை போலீஸார், அங்கிருந்து மொத்தமாக 2.7 கிலோ கஞ்சா மற்றும் 13 மூட்டைகளில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்மலிங்கத்தின் அண்ணன் முத்துகிருஷ்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணன்கோவில் பகுதியில் கடந்த மாதம் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணன்கோவில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து பலர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE