தாம்பரத்தில் மது போதையில் வீட்டில் இறந்து கிடந்த தந்தை: உடலை வாங்க மறுத்து போனை சுவிட்ச் ஆஃப் செய்த மகள்

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: வேலைக்குச் செல்லாமல், குடிப்பழக்கத்துக்கு அடிமையான தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர், மது போதையிலேயே உயிரிழந்தார். அவருடைய உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்து விட்ட சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு தாம்பரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 49 வயதுள்ள ஆண் ஒருவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் திருமணமானவர். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு மகள் மட்டும் தந்தையுடன் தங்கி இருந்தார். மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகளுக்கும் தனது தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் அவரும் தந்தையை விட்டு பிரிந்து பாட்டி வீட்டுக்குச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மென்பொருள் நிறுவன ஊழியர் கடந்த ஐந்து மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி மற்றும் மகள் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்ததால் அந்த நபர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும், அவர் வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் மது போதையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் மது போதையில் விழுந்து கிடந்த அந்த நபரை குடியிருப்புவாசிகள் மீட்டு வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நேற்று இரவு வரை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் குடியிருப்புவாசிகள் சந்தேகம் அடைந்தனர். இது குறித்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த வீட்டு உரிமையாளர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த மருத்துவ பணியாளர்கள் வீட்டுக்குள் கிடந்த அந்த நபரை பரிசோதித்து பார்த்ததில், அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த நபர் உயிரிழந்தது குறித்து, அவரது மகள் மற்றும் மாமியாரை தொடர்பு கொண்டு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தனக்கு அப்பா தேவையில்லை எனக் கூறி மகள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தந்தையின் உடலை ஒப்படைக்க மகளை தேடி வருகின்றனர். மனைவியை பிரிந்து, பின்னர் மகளையும் பிரிந்து, மது போதைக்கு அடிமையான நிலையில் உயிரிழந்த தந்தையின் உடலைப் பெற மகள் உள்ளிட்ட உறவினர்கள் மறுத்து விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE