நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு: பதவியை ராஜினாமா செய்த பாஜக நிர்வாகி

By KU BUREAU

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் புனித் தியாகி மீது நடிகை ஒருவர், பாலியல் குற்றம் சாட்டுகளை முன்வைத்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் புனித் தியாகி, உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் கட்சியின் நகரப் பிரிவுத் தலைவராக உள்ளார். அவர் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர், பிராந்திய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததாகக் கூறி, தியாகி தன்னை நீண்ட காலமாக பாலியல் ரீதியாக சுரண்டியதாகக் குற்றம் சாட்டி எக்ஸ் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், “பாஜக தலைவர் தியாகி என் மகனுக்கு அடிக்கடி பரிசுகளை வழங்குவதன் மூலம் எங்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார். பின்னர் எனக்கு பூங்கொத்துகள் மற்றும் பிற பரிசுகளை அனுப்பத் தொடங்கினார். நான் எனது கணவருடனான உறவை முடித்துக் கொண்டு எனது மகனுடன் மும்பையில் வசித்து வந்தேன். என் மகனுடன் பாஜக தலைவரின் நெருக்கம் மற்றும் என்னுடன் நல்ல நடத்தை ஆகியவை என் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு கிடைத்ததாக நினைக்கத் தூண்டியது. நாங்கள் சில மாதங்கள் நெருங்கிய உறவு வைத்திருந்தோம். பின்னர் அவர் என்னிடமிருந்து விலகிவிட்டார். இதுகுறித்து உ.பி முதல்வர், பிரதமர் மற்றும் பாஜக உயர்மட்ட தலைவர்களிடம் நான் புகார் அளித்தேன், ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்

இதனையடுத்து, புனித் தியாகி தனது ராஜினாமா கடிதத்தை பாஜக உத்தரபிரதேச தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங்குக்கு அனுப்பினார். மேலும், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் "ஆதாரமற்றவை" என்று கூறினார். ஆனால் கட்சியின் இமேஜ் கெடுவதை விரும்பவில்லை என்பதால் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE