திருப்பூரில் சிலிண்டர் எரிவாயு கசிந்து தீ விபத்து: சிறுமி, தந்தை படுகாயம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் அருகே சிலிண்டர் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீவிபத்தில் 11 வயது சிறுமி மற்றும் தந்தை படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர் அருகே இடுவாய் வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (44). இவரது மனைவி மகாலட்சுமி (36). தம்பதியருக்கு ஸ்ரீமதி (13) மற்றும் கவுசல்யா (11) என 2 மகள்கள். அதேபகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். தம்பதியர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த நிலையில், மகள்கள் இடுவம்பாளையம் அரசு பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பு பயின்று வந்தனர். இன்று (அக்.16) வீட்டில் சிலிண்டர் தீர்ந்த நிலையில் மாற்று சிலிண்டரை மாற்ற முயன்றபோது எரிவாயு கசிந்தது.

அப்போது, தீ திடீரென சமையலறையில் பற்றி எரிந்தது. இதில், பதறிய தாய் மகாலட்சுமி மகள் ஸ்ரீமதியை அழைத்துக் கொண்டு வெளியேறினார். அப்போது சிறுமி கவுசல்யாவை வீட்டின் மற்றொரு அறையில் இருந்து தந்தை ஜீவா காப்பாற்றி இருவரும் வெளியேறியபோது இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE