தற்காலிக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு? - தலைமை ஆசிரியரை கண்டித்து முற்றுகை போராட்டம்

By KU BUREAU

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த பெரிய மோட்டூர் பூனைக்குட்டை பள்ளம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியின் தலைமை ஆசிரியராக வாணியம்பாடி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் மாலை வகுப்பு முடிந்து மாலை 5.30 மணியளவில் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது, தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தனது அறைக்கு ஆசிரியரை அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை கூச்சலிட்டபடி அவசர, அவசரமாக பள்ளியை விட்டு வெளியேறி தனது சகோதர ரிடம் நடந்த விவரத்தை கூறி கதறி அழுதார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யறிந்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தற்காலிக விடுப்பு எடுத்துக் கொண்டதால் பள்ளிக்கு வர வில்லை.

இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன், வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் அசோக்குமார், பெரிய மோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் கமல் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, "ஆசிரியையிடம் அத்துமீறி நடந்துக்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி அவர் மீது குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்று, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை காவல் துறையினர் நேற்று மாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE