லக்னோ: உண்ணும் உணவில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கலப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, மாநிலத்தில் சுகாதாரமற்ற உணவுப் பழக்கங்களைத் தடுக்கும் நோக்கில் இரண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
உத்தரப் பிரதேச அரசால் கொண்டுவரப்படவுள்ள தவறான மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் எச்சில் துப்புதல் தடைச் சட்டம் 2024 மற்றும் உ.பி., உணவு மாசுபாடு (நுகர்வோர் அறியும் உரிமை) அவசரச் சட்டம் 2024 ஆகியவை உணவில் எச்சில் துப்புவது அல்லது பிற சுகாதாரமற்ற நடைமுறைகள் உட்பட உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர் மீது கடுமையான தண்டனைகளை விதிக்க வகை செய்யும்.
மேலும், இந்தச் சட்டங்கள் மூலமாக உணவு தயாரிப்பு மற்றும் கையாளுதல் போன்றவற்றில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலர், சட்ட அதிகாரி, உத்தரப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று அவசரச் சட்டங்கள் குறித்து ஆலோசித்து இறுதி செய்ய உள்ளதாக தெரிகிறது.
எச்சில், சிறுநீர் போன்றவற்றை கலந்து உணவை மாசுபடுத்தியதற்காக பலர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது. கடந்த மாதம், சஹாரன்பூரில் இளம்பெண் ஒருவர் ரொட்டியில் எச்சில் துப்புவது போன்ற வீடியோ வைரலானது. இதேபோல், நொய்டாவில் பழச்சாறில் சிறுநீர் கலந்து மாசுபடுத்தியதற்காக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் காஜியாபாத்தில் ஒருவர் பழச்சாற்றில் எச்சில் துப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.
» பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன்: நடிகர் சுதீப் கிஷன் அறிவிப்பு!
» கேளம்பாக்கம் | 35-வது மாடியில் இருந்து குதித்து கொரிய மாணவர் உயிரிழப்பு
இந்த புதிய சட்டங்கள் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் எனவும், மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப்பொருட்களை மாசுபடுத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க இச்சட்டங்கள் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.