கேளம்பாக்கம்: சென்னை அருகே நாவலூரை அடுத்த ஏகாட்டூர் ஓ.எம்.ஆர். சாலையில் 40 மாடிகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 35-வது மாடியில் யாங் கியூ லிம் (45), அவரது மனைவி, மகன் சினோ லிம் (15) ஆகியோர் வசித்து வருகின்றனர்.
யாங் கியூ லிம் மறைமலை நகரில் உள்ள கொரிய நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அலுவலக வேலையாக கடந்த வாரம் தென் கொரியா சென்று இருந்தார். இந்நிலையில் வீட்டில் அவரது மனைவியும், மகனும் மட்டுமே இருந்தனர். மகன் சினோ லிம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பன்னாட்டு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இவர்கள் வசிக்கும் குடியிருப்பின் பின் பக்கத்தில் பயங்கர சத்தம் கேட்டது. அப்போது பணியில் இருந்த பாதுகாவலர்கள், சிறுவனின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் மற்றும் பாதுகாவலர்கள் வந்து ஒவ்வொரு மாடியாக சோதனை செய்தபோது சினோ லிம் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த தகவல் அவரது தாய்க்கே தெரியாமல் இருந்துள்ளது.
» போதை மாத்திரை விற்பனை செய்த சினிமா உதவி இயக்குநர் சென்னையில் கைது
» கனமழை: இன்று 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் கீழே வந்து பார்த்து இறந்து கிடந்தது தனது மகன்தான் என உறுதி செய்தார். கேளம்பாக்கம் போலீஸார் வீட்டில் ஆய்வு செய்ததில் கொரிய மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அவரது தந்தை வேலை செய்யும் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.