தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் சேர்மத்துரை. இவர், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தென்காசி மாவட்ட மேலாளராக கடந்த 2020 முதல் 2023ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.
அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ளன. அம்பாசமுத்திரம் அருகே ஜமீன் சிங்கம்பட்டியில் உள்ள நிலத்தை நிறுவனத்தின் இயக்குநர்களின் கையெழுத்தை மோசடியாக போட்டு, நிறுவனத்தின் முத்திரைகளை மோசடியாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு 5 ஏக்கர் நிலத்தையும், திருவள்ளூர் பூம்புகார் நகரைச் சேர்ந்த செல்வராகவன் என்பவருக்கு 6 ஏக்கர் நிலத்தையும் சேர்மத்துரை விற்பனை செய்துள்ளார்.
மேலும், கடையம் பெரும்பத்து கிராமத்தில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான 94 ஏக்கர் நிலத்தில் 22.25 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் சேர்மத்துரை தனது சகோதரர் ராமசாமி என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நிலத்தை ராமசாமி சேர்மத்துரையின் இரண்டு மனைவிகளான ரெபேக்காள், செல்வி மற்றும் சேர்மத்துரையின் மகள் ஹெப்சிராணி ஆகியோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்த மோசடிக்கு சேர்மத்துரையின் மற்றொரு சகோதரர் சக்தி கண்ணன், ஆலங்குளம் காந்தி நகரைச் சேர்ந்த சார்லஸ், முத்துக் குமார், கடையம் மாதாபுரத்தைச் சேர்ந்த ஜோசப் பால்ராஜ், மதுரையைச் சேர்ந்த சிங்கார வடிவேல், ஆவுடையானூரைச் சேர்ந்த அருள் செல்வன், முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த அமிர்தராஜ், நாகல்குளத்தைச் சேர்ந்த அமல்ராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
» துர்கா பூஜைக்கு சென்ற 2 சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கிராமத் தலைவரின் மகன் கைது!
» போலி கையெழுத்திட்டு தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய தலைமைக் காவலர் கைது @ ஊமங்கலம்
மோசடி செய்யப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து தெரிய வந்த தனியார் நிறுவனம் சேர்மத்துரையை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. மேலும், சேர்மத்துரை நிலத்தை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டு திரும்ப நிலத்தை நிறுவனத்துக்கு ஒப்படைத்து விடுவதாகவும், ரூ.66.05 லட்சத்துக்கு கடன் உறுதிமொழியும் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அதன்படி சேர்மத்துரை நடந்து கொள்ளாமல் நிறுவனத்தை ஏமாற்றியுள்ளார்.
இதனால் இதுகுறித்து தனியார் நிறுவன மண்டல மேலாளர் சண்முக சுந்தரம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசனிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் சேர்மத்துரை, ஜோசப் பால்ராஜ், முத்துக்குமார் ஆகிய மூவரை கைது செய்த போலீஸார் மேலும் 13 பேரை தேடி வருகின்றனர்.