சென்னை: சென்னையில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் மோசடி செய்த வடமாநில கும்பல் அரக்கோணத்தில் கைது செய்யப்பட்டனர.
சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி ராமகிருஷ்ண மடம் சாலையில் நகை அடகுக்கடை வைத்திருப்பவர் பிரகாஷ் சந்த் (59). இவரது கடைக்கு கடந்த செப்டம்பர் 16ம் தேதி காலை 11 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் நகையை அடகு வைக்க வந்தார். வந்தவர் இங்கு ஏற்கனவே, நான்கு முறை நகைகளை அடகு வைத்து மீட்டுள்ளேன்.
தற்போது அவசரமாக பணம் தேவைப்படுவதால் மீண்டும் நகைகளை அடகு வைக்க வந்திருப்பதாக கூறவே, அவர் வைத்திருந்த 307 கிராம் எடை கொண்ட நகைகளை பெற்றுக்கொண்டு ரூ.15 லட்சம் கொடுத்து அனுப்பியுள்ளார். பிறகு அந்த நகைகளை பிரகாஷ் சந்த் சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் துப்பு துலக்கினர். இந்நிலையில், போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற கும்பல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்த சென்னை போலீஸார், அங்கிருந்த ராஜஸ்தானை சேர்ந்த பிந்து (43), சுந்தர்பாபா (44), விக்ரம் பகத் (58), உத்திரபிரதேசத்தை சேர்ந்த சோனல் (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
» மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் கழுத்தை அறுத்து தற்கொலை
» டீ குடிக்க கூப்பிட்டதால் தகராறு: இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய தம்பதி கைது
அவர்களிடமிருந்து 50 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியமான பெரு நகரங்களின் அருகில் உள்ள மாவட்டங்களில் ஒரு மாதம் தங்குவார்களாம். பெரு நகரங்களில் கைவரிசை காட்டி விட்டு, பங்கு பிரித்துக் கொண்டு பிறகு சொந்த ஊருக்கு செல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
போலி ஆதார் கார்டுகள் மூலம் செல்போன் எண்களை வாங்கி உபயோகித்தும் வந்துள்ளனர். சென்னையில் ராயப்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளிலும் இதே போல போலி நகைகளை அடகு வைத்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பலின் முழு பின்னணி மற்றும் தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.