கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியார் தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் மாநகராட்சி 48 வார்டுகளில் உள்ள வீடுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 60 டன் குப்பை உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றும் சுமார் 400 தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கின்றனர். பின்னர், அவர்கள் அந்தக் குப்பைகளை வாகனம் மூலம் கரிக்குளத்தில் உள்ள குப்பைக் கிடங்கிற்குக் கொண்டு செல்வார்கள்.
இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும், வேலைப் பழுவைக் குறைக்க வேண்டும், போதிய தூய்மைப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, கும்பகோணம் காரனேஷன் மருத்துவமனை வளாகத்திற்குள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கத் தலைவர் ஜெயராமன் தலைமையில், சுமார் 400 தூய்மைப் பணியாளர்கள் திடிரென மதியம் நேரத்திற்குப் பிறகு வேலை நிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாகத் தூய்மைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் வி.ஜெயராமன் கூறியது, "கும்பகோணம் மாநகராட்சிக்குட்ப்பட்ட 48 வார்டுகளில் 400 தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றோம். இதற்காக ஒருவருக்கு ரூ.12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அண்மைக் காலமாக சேகரிக்கப்படும் குப்பைகள் 10 வகையாக தரம் பிரிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் கரிக்குளம் கிடங்கில் பெற்றுக்கொள்ளமாட்டாது எனவும், மேலும் காலை 6 மணி முதல் 11:30 மணி வரை சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக மதியம் 1 மணிக்கு பிறகு வர வேண்டும் எனக் கூறுகின்றனர்.
» நாச்சியார்கோவில்: மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்த தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம்
» கூலி கேட்டதற்காக தலித் தொழிலாளி மீது தாக்குதல்: சிறுநீர் கழித்த கொடூரம்
இதேபோல் ஒருவருக்குத் தினந்தோறும் ரூ.593 என மாவட்ட நிர்வாகத்தால் ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தனியார் நிறுவனம் ரூ.400 மட்டுமே வழங்குகின்றனர். மேலும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வதில்லை. பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் குப்பைகளுடன் கலந்திருக்கும் மனித கழிவை, வெறும் கையால் அள்ள வேண்டிய அவல நிலை உள்ளது. இதேபோல் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும், பண்டிகை கால போனசும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதியம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்று ஜெயராமன் கூறினார்.
இதைத்தொடர்ந்து, தனியார் நிறுவனம், அக்.11ம் தேதி காலை கோரிக்கை தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தகை முடிவின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.