கோவையில் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் உட்பட இருவர் கைது: காரில் இருந்த ரூ.13 லட்சம் பணம் பறிமுதல்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை வெள்ளலூரில், சிங்காநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நான்சி நித்யா கரோலின் என்பவர் சார்-பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சித்தாபுதூர் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர், தனது அசல் பத்திரங்கள் பெறுவது தொடர்பாக சிங்காநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு சார்-பதிவாளர் நான்சி நித்யா கரோலின், தனது இளநிலை உதவியாளர் பூபதி ராஜா என்பவரை அழைத்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், அசல் பத்திரம் தொடர்பான ஆவணங்களை அளிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் தருமாறு நான்சி நித்யா கரோலின், தனது உதவியாளர் பூபதி ராஜா மூலமாக, விண்ணப்பதாரர் கருப்புசாமியிடம் கேட்டுள்ளார்.

அவர் பணம் கொடுக்க விரும்பவில்லை. இதையடுத்து கருப்புசாமி மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து இருவரையும் உரிய ஆதாரத்துடன் பிடிக்க, போலீஸார் திட்டமிட்டனர். இதையடுத்து ரசாயனம் தடவிய பணத் தாள்களை கருப்புசாமியிடம் போலீஸார் இன்று மாலை (அக்.9) கொடுத்து அனுப்பினர். அதன்படி, ரூ.30 ஆயிரம் பணத்தை கருப்புசாமி இன்று மாலை இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவிடம் கொடுத்துள்ளார். அவர் பணத்தை வாங்கி சார்-பதிவாளர் நான்சி நித்யா கரோலினிடம் கொடுத்துள்ளார். அவரும் வாங்கியுள்ளார். இதை மறைந்திருந்து கண்காணித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், சார்-பதிவாளர் நான்சி நித்யா கரோலின், இளநிலை உதவியாளர் பூபதி ராஜா ஆகியோரை பிடித்தனர். இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து போலீஸார், சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் காரை சோதனை செய்தனர். காரில் ரூ.13 லட்சம் பணம் இருந்தது. ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து போலீஸார் ரூ.13 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE