காங்கிரஸ் எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு: கர்நாடகாவில் அடுத்த பரபரப்பு

By KU BUREAU

பெங்களூரு: 34 வயது பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை, கடத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் புகாரின் அடிப்படையில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி மீது 34 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். புகாரில் அவரது உதவியாளரான அர்ஜுன் பெயரும் உள்ளது. இதனையடுத்து போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சமூக சேவகரான பாதிக்கப்பட்ட 34 வயது பெண் அளித்த புகாரின்படி, வினய் குல்கர்னியுடன் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானதாகவும், ஆரம்பத்தில் உரையாடல்கள் வழக்கமானதாக இருந்ததாகவும், பின்னர் குல்கர்னி வெளிப்படையாக பாலியல் ரீதியாக பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அடிக்கடி நிர்வாணமாக வீடியோ அழைப்பில் வந்ததாகவும், தன்னுடன் பழக மறுத்ததால் குண்டர்களை அனுப்பி மிரட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குல்கர்னி தன்னை பெலகாவி சர்க்யூட் ஹவுஸுக்கு 2022ம் ஆண்டி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அழைத்ததாகவும், அங்கு அவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து ஆகஸ்ட் 24, 2022 அன்று, அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையைச் சந்திப்பதற்காக பெங்களூரில் இருந்தபோது, ​​குல்கர்னி தன்னை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒதுக்குப்புறமான பகுதிக்கு காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்

மேலும், குல்கர்னியின் உதவியாளர் அர்ஜுன், தனது தொலைபேசியில் இருந்து உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை நீக்கி ஆதாரங்களை மறைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ், பாலியல் வன்கொடுமை, கடத்தல், கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE