தாழையூத்து ஊராட்சி தலைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவி கிருஷ்ணவேணி என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தொடர்பான வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் வியாழக்கிழமை (10-ம் தேதி) அறிவிக்கப்படுகிறது.

திருநெல்வேலி அருகே வடக்கு தாழையூத்தை சேர்ந்த பொய்யாமணி மனைவி கிருஷ்ணவேணி (38). தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவியாக பொறுப்பு வகித்தார். அப்பகுதியில் கழிப்பறை கட்டுவது தொடர்பாக அவருக்கும், வேறு சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி இரவு 9 மணியளவில் ஊராட்சி அலுவலகத்திலிருந்து கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை வழிமறித்து ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தாழையூத்து போலீஸார் வழக்கு பதிந்து சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், ஜேக்கப், பிரவீன் ராஜ், விஜயராகவன் உட்பட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்து சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், ஜேக்கப், பிரவீன் ராஜ், விஜயராகவன் ஆகிய ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு கூறினார். வழக்கு விசாரணையின்போது நடராஜ் என்பவர் மரணடைந்துவிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் இருவர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வியாழக்கிழமை (10-ம் தேதி) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE