கடலூரில் சுருக்கு மடிவலையில் பிடித்த 1.5 டன் மீன்கள் பறிமுதல்!

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகள், பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் பதிவு செய்யப்படாத சுருக்குமடி வலையை பயன்படுத்தி, படகுகள் மூலம் பிடிக்கப் பட்ட மீன்கள் விற்பனை செய்யபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் யேகேஷ், மீன்வளத் துறை ஆய்வாளர் அஞ்சனதேவி, மீன் வளத்துறை அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சசிக்கலா மற்றும் காவலர்கள் ஆகியோர் இன்று (அக்.8) சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் அங்கு பதிவு செய்யப்படாத படகு மூலம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1.5 டன் மீன்கள் இருந்தது.

இதையடுத்து அந்த மீன்களை மீன்வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மீன்களை ஏலம் விட்டனர். ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் போனது. அந்த பணத்தை அரசு கணக்கில் வரவு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவு வைத்தனர். தொடர்ந்து பதிவு செய்யப்படாத படகு மூலம், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததாக 3 படகு உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் அப்பகுதி மீனவர்களிடம் பதிவு செய்யப்படாத படகு மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து விட்டு சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE