லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை முன்கூட்டியே தகவல் தெரிவிக்க லஞ்சம் கொடுத்தவர் கைது

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை செய்வதை முன் கூட்டியே தகவல் தெரிவிக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் மேற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சதாசிவம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் ரவிக்குமாரை சந்தித்து, லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடத்தப்படும் சோதனை குறித்து முன் கூட்டியே தகவல் தெரிவிக்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் கொடுப்பதாகவும், மாதம் தோறும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக பேரம் பேசியுள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் ரவிக்குமார், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜனிடம் புகார் அளித்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம், லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் ரவிக்குமாரிடம் செல்போனில் தொடர்புக் கொண்டு, ஓமலூர் சுங்கச்சாவடி அருகே தனது மகன் லஞ்சமாக ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வந்து காத்திருப்பதாகவும், அதனை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீஸார் மாறுவேடத்தில் மறைந்திருக்க, காவல் ஆய்வாளர் ரவிக்குமார் ஓமலூர் சுங்கச்சாவடி பகுதியில் காத்திருந்தார். அப்போது, வட்டரா போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவத்தின் மகன் அசோக் ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வந்து, காவல் ஆய்வாளர் ரவிக்குமாரிடம் லஞ்சம் கொடுக்க முயன்றார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அசோக்கை மடக்கி பிடித்து, பணத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர்.

தனது தந்தை சதாசிவம் பணத்தை கொடுத்து அனுப்பியதாகவும், இது லஞ்ச பணம் என்று தெரியாது என உண்மையை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவரை போலீஸார் விடுவித்தனர். இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, சொந்த ஊரான மல்லச் சமுத்திரத்தில் வீட்டில் இருந்த சதா சிவத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்து, சேலம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர். இது சம்பந்தமாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE