தேனி: தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு ஓட்டுநர்களுக்கு உரிமம், வாகன புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இங்கு இடைத்தரகர்களின் ஆதிக்கம் மற்றும் பணப் புழக்கம் அதிகம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் இன்று (அக்.8) மாலை டிஎஸ்பி சுந்தர் ராஜ் தலைமையில் 8 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டது. அலுவலர்களிடம் இருந்த மொபைல் போன்கள் அணைத்து வைக்க உத்தரவிடப்பட்டது.
அலுவலகம் மட்டுமல்லாது வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத பணம் எதுவும் உள்ளதா என்பது குறித்து மாலை 5 மணிக்கு தொடங்கிய ஆய்வு இரவு 8மணிக்கு மேலும் நீடித்தது.