விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் ஊழியர்களுக்கான சேம நல நிதியில் ரூ.9.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் இரா.வினித் மாவட்ட குற்றப்பிரிவில் இன்று ஆஜரானார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் நகராட்சியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை ஊழியர்களின் சேம நலநிதியில் (பி.எப்.) ரூ 9.25 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நகராட்சிகளின் வேலூர் மண்டல நிர்வாக இயக்குநர் லட்சுமி, தணிக்கை துறை அலுவலர்களுடன் நேற்று ஒவ்வொரு பிரிவு துறை அதிகாரிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், நகராட்சி பள்ளி மற்றும் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பிற்கால குடும்ப சேமநல நிதியில் ரூ.9.25 கோடி முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. இந்த முறைகேட்டில், கருவூல அலுவலக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, கருவூல அதிகாரிகளிடமும், 2021ம் ஆண்டு முதல் விழுப்புரம் நகராட்சியில் பணிபுரிந்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் விழுப்புரம் எஸ்பி தீபக் ஸ்வாட்ச்சிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையிலான போலீஸார், விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை இணைச் செயலாளர் இரா.வினித்திடம் இந்த முறைகேடு தொடர்பாக இன்று விசாரணை மேற்கொண்டார்.
இது குறித்து டிஎஸ்பி ராமலிங்கத்திடம் கேட்டபோது, "நகராட்சி தணிக்கை அறிக்கை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. அதன் பின்னரே மோசடி நடைபெற்றதா இல்லையா என்பது தெரியவரும். இப்போது விசாரணைக்கு ஆஜராகியுள்ள வினித்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.