சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், பயணச்சீட்டு இன்றி பயணித்தவர்கள், கட்டணம் செலுத்தாமல் சுமைகளை எடுத்துச் சென்றது உள்ளிட்ட குற்றம் புரிந்தோரிடம் இருந்து கடந்த 6 மாதத்தில் ரூ.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் ரயில்வே கோட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் சென்று வரும் ரயில்களில், பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதகர்கள் தொடர் மற்றும் திடீர் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், சேலம் ரயில்வே கோட்ட பயணச்சீட்டு பரிசோதகர் நடத்திய சோதனைகளில், ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்கள் மீது 79,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் அபராதமாக மொத்தம் ரூ.6.28 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான வழக்குகளை விட, 16.20 சதவீதம் கூடுதலாகும். குறிப்பாக கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அபராதமாக ரூ.5.22 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சாதாரண பயணச்சீட்டு எடுத்து, உயர் வகுப்புகளில் பயணித்தவர்கள் மீது மொத்தம் 68,681 வழக்குகள் (68.9 சதவீதம் கூடுதல்) பதிவு செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3.71 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில், கட்டணம் செலுத்தாமல் சுமைகளை எடுத்துச் சென்றவர்கள் மீது 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.1.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 6 மாதத்தில் 26,076 முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பயணச்சீட்டு தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் மொத்தம் ரூ.10 கோடி அபராதம் (37.1 சதவீதம் கூடுதல்) வசூலிக்கப்பட்டுள்ளது.
» பாபநாசம் அருகே சாமி சிலைகளை அடகு பிடித்தவர் கைது: 5 சிலைகளும், பெரிய மணியும் மீட்பு
» மதுரையில் பரபரப்பு: குடும்பத்தகராறில் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன் கைது
இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.7.30 கோடியாக இருந்தது. எனவே, ரயில்களில் பயணிப்போர் உரிய பயணச்சீட்டு மற்றும் சுமைகளுக்கு உரிய கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.