சென்னை | காதலன் திட்டியதால் காதலி தற்கொலை: இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை

By KU BUREAU

சென்னை: காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காதலன் உள்ளிட்ட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மரகதம் என்பவரின் மகள் ஷாலினி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரைக் காதலித்து வந்தார். அருணுடைய நடவடிக்கைகளைப் பிடிக்காத ஷாலினியின் பெற்றோர் காதலை ஏற்க மறுத்தனர். ஒரு கட்டத்தில் ஷாலினியும், அருணுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண், கடந்த 2022 மார்ச் 24 அன்று தனது நண்பர் ஈஸ்வரனுடன் சென்று ஷாலினியை ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகஆர்.கே.நகர் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அருண் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வரனை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.தேவி, குற்றம் சாட்டப்பட்ட அருண் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வரன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையில் ரூ.20 ஆயிரத்தை ஷாலினியின் தாயார் மரகதத்திடம் வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE