மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் கைது!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

விருதுநகர்: அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் விஜயநல்லதம்பி மோசடி புகாரில் இன்று கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் விஜயநல்ல தம்பி. முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் கடைசி தம்பியான இவர் அதிமுகவில் மாவட்ட வழக்கறிஞர் பரிவு செயலாளராகவும், மாவட்ட மாணவரணிச் செயலாளராகவும் பணியாற்றியவர். மேலும், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். அண்மையில் திமுகவில் இணைந்தார். கடந்த 2020 செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை கூட்டுறவு, சத்துணவு, ஆவின், ரேசன் கடை, ஊராட்சி எழுத்தர் போன்ற பதவிகளுக்கு பலரிடம் பணம் வாங்கி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதன்பெயரில் அவரது உதவியாளர்களிடம் பணம் கொடுத்ததாக மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதேபோன்று, விஜயநல்லதம்பி மீது சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரும் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் கடந்த 2022-ல் ஒரு புகார் அளித்தார்.

அதில், தனது அக்கா மகனுக்கு ஆவினில் மேலாளர் பணி வாங்கித் தருவாதகக் கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக விஜய நலத்தம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விஜய நலத்தம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீதும் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விஜயநலத்தம்பியை விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் இன்று மாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE