கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கூலித் தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில், முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் இன்று சரண் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஏ.நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (43), கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மாள் (27). இவர் கடந்த 1ம் தேதி மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து வள்ளியம்மாள் பர்கூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே கடந்த 3ம் தேதி பிற்பகலில் நாகமங்கலத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மணிகண்டன் சடலமாக கிடந்தார்.
மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், மணிகண்டன் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனினும், கந்திகுப்பம் போலீஸார், நாகமங்கலம் அருகே அச்சமங்கலம் கூட்டு ரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கடந்த 1-ம் தேதி 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேருடன் மணிகண்டன் செல்வது பதிவாகி இருந்ததை கண்டறிந்தனர்.
விசாரணையில் அவருடன் சென்றது, அவரது சித்தப்பா முன்னாள் ராணுவ வீரர் நாகராஜன் (63), அச்சமங்கலம் கூட்டு ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வரும் பழனிகுமார் (43), அச்சமங்கலத்தை சேர்ந்த ராஜ்குமார் என தெரிந்தது. 3 பேரையும் போலீஸார் தேடி வந்த நிலையில், நாகராஜன், பழனிகுமார், ராஜ்குமார் ஆகிய 3 பேரும் அச்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் முன்னிலையில் இன்று சரண் அடைந்து, மணி கண்டனை தாங்கள் கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். 3 பேரும் கந்திகுப்பம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர்.
» ‘11 முறை மனு அளித்தும் பயனில்லை...’ - கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் ஆவேசமடைந்த நபரால் பரபரப்பு
» பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு குழுக்களை உருவாக்க நெல்லையில் டிஐஜி தலைமையில் ஆலோசனை
கொலைக்கான காரணம் குறித்து போலீஸாரிடம் கூறும்போது, “மணிகண்டன் மனைவி வள்ளியம்மாளுக்கும், நாகராஜனுக்கு தவறான பழக்கம் இருந்துள்ளது. மேலும், தம்பதியினர் இருவரும் நாகராஜனிடம் ரூ.17 லட்சம் கடனாக பெற்றுள்ளனர். இது தொடர்பாக மணிகண்டனுக்கும், நாகராஜனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, பழனிகுமார், ராஜ்குமாருடன் இணைந்து மணிகண்டனை கிணற்றில் தள்ளி 3 பேரும் கொலை செய்துள்ளனர்” என்றனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.