இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக் கோரி மீனவப் பெண் தீக்குளிக்க முயற்சி

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் இருக்கும் பாம்பன் மீனவர்களை மீட்கக்கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மீனவப் பெண் ஒருவர், தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து கடந்த ஆக.8ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றிய இலங்கைக் கடற்படையினர், அதிலிருந்த 35 மீனவர்களையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது. இந்நிலையில் 35 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்களின் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் மீனவப் பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

மனு அளிக்க வந்த மீனவப் பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர் ஒருவரின் தாயான மரிய செல்வி என்பவர் தான் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகில் இருந்த பெண்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் மீனவப் பெண்கள் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற மீனவ பெண் மரிய செல்வி.

இதுகுறித்து தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜெனோவா என்ற மீனவப் பெண் கூறுகையில், “எனது தம்பி கிரீம்சன், உறவினர்கள் ராஜ், பிரகாஷ், சகாயராஜ் உள்ளிட்ட 35 மீனவர்கள் இலங்கை புத்தலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் டிக்ளோஸ் உள்ளிட்ட 3 பேருக்கு சிறையில் பெரியம்மை நோய் பாதிக்கப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 35 பேரையும் மொட்டை அடித்து சரியாக உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்வதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளதாகவும் மீனவர்கள் போன் மூலம் தெரிவித்தனர்.

அறுபது நாட்களுக்கு மேலாகியும் 35 மீனவர்களையும் சிறையில் இருந்து விடுவிக்கவில்லை. மேலும், மீன்வளத்துறை மூலம் சிறையில் இருக்கும் மீனவர் குடும்பத்திற்கு தினமும் அரசு வழங்கக் கூடிய உதவித் தொகை ரூ.350ம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் 35 மீனவர்களின் குடும்பத்தினரும் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். எனவே 35 மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE