சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: சிபிசிஐடி அதிகாரி சாட்சியம்

By கி.மகாராஜன்

மதுரை: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பி இன்று மதுரை நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்கிஸ். இவர்கள் கடந்த 2020 ஜூன் மாதம் கரோனா ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ தரப்பில் 2,427 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை மொத்தமுள்ள 104 சாட்சிகளில் 51 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி தமிழரசி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முதலில் விசாரித்த சிபிசிஐடி விசாரணை அதிகாரி டிஎஸ்பி-யான அனில்குமார் 51-வது சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார்.

அப்போது அவர், தந்தை, மகன் இருவரும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்தனர் எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்.16க்கு நீதிபதி ஒத்திவைத்தார். வழக்கில் 52வது சாட்சியாக இருக்கும் சிபிஐ விசாரணை அதிகாரி விஜயகுமார் சுக்லா அக்.16-ல் நீதிமன்றத்தில் சாட்சியளிக்கிறார்.

இவரிடம், கைது செய்யப்பட்டுள்ள 9 பேரின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்துகின்றனர். இந்த குறுக்கு விசாரணை முடிய 2 மாதம் ஆகும். பின்னர் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE