பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில்  தாய், மகன் உயிரிழப்பு - சிங்கப்பெருமாள் கோவிலில் பரிதாபம்

By பெ.ஜேம்ஸ் குமார்

சிங்கப்பெருமாள் கோவில்: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மனைவி ஜெயஸ்ரீ (32). இவர்களது மகன் ஆலன் (15) அஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இன்று முற்பகல் 11 மணிக்கு, சிங்கபெருமாள் கோவில் நூலகம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்த இருசக்கர வாகனத்தில் அம்மாவும் மகனும் சென்றுள்ளனர்.

மின் கட்டணம் செலுத்திவிட்டு மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பியபோது ஜி.எஸ்.டி., சாலையில் ஒரகடம் சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற போது திருவண்ணாமலையில் இருந்து அடையாறு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஜெயஸ்ரீ, சிறுவன் ஆலன் இருவரும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஈருடையாம்பட்டைச் சேர்ந்த யுவராஜ் (54) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பேருந்து பைக் மீது மோதிய விபத்தில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE