ரயில் தண்டவாளத்தில் மண் குவியல்: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

By KU BUREAU

உத்தரப் பிரதேசம்: ரேபரேலி மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் மணல் குவியல் கொட்டப்பட்டதை லோகோ பைலட்டுகள் கவனித்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

ரேபரேலி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ் சிங் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலை பயணிகள் ரயிலின் லோகோ பைலட்டுகள் கவனித்தனர். இதனையடுத்து அந்த ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பைலட்டுகளின் எச்சரிக்கையை அடுத்து, தண்டவாளத்தில் இருந்த மண் அகற்றப்பட்டு, ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

காவல்துறையின் தகவல்களின்படி, ஞாயிறு மற்றும் திங்கள் (அக்டோபர் 6-7ம் தேதிகள்) இடைப்பட்ட இரவில் ரேபரேலியில் உள்ள ரகுராஜ் சிங் ரயில்வே ஸ்டேஷன் அருகே இந்த சம்பவம் நடந்தது.

இச்சம்பவம் குறித்து பேசிய ரேபரேலி காவல்துறை அதிகாரி தேவேந்திர படோரியா, "ரயில்வே பாதையில் மண் குவியல் கொட்டப்பட்டதால், ரேபரேலியில் இருந்து வந்த ரயில் நிறுத்தப்பட்டது. இப்பகுதியில் இரவு நேரங்களில் மண் அள்ளுவதற்கு டிப்பர்களை பயன்படுத்தி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் டிரைவர் ஒருவர் ரயில் பாதையில் மண்ணை கொட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு செப்டம்பரில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் எல்பிஜி சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டதால், ஒரு பெரிய ரயில் விபத்து விரைவில் தவிர்க்கப்பட்டது. அதேபோல செப்டம்பர் 8 ஆம் தேதி, பிரயாக்ராஜிலிருந்து பிவானிக்கு சென்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ், கான்பூரில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்பிஜி சிலிண்டர் மீது மோதியது. இந்த ரயிலும் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE