திருச்சி: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் சாதி குறித்து பாட்டுப்பாடியதாக ஏ.கே.அருண் என்பவர் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது, திருச்சி எஸ்.பி. வருண்குமாரை விமர்சித்து பேசினார்.
இதையடுத்து, நாதக கட்சியைச் சேர்ந்த மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊமச்சிக்குளம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த திருப்பதி (33), அறுவெறுக்கத் தக்க வகையில் எஸ்.பி.யை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதுதொடர்பாக, திருச்சி எஸ்.பி. வருண்குமர் அளித்த புகாரின் பேரில், தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திருப்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த திருப்பதி, திருச்சி நாதக அலுவலகத்தில் தங்கி தில்லை நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில், துறையூர் வட்டம் ஆலத்துடையான்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் ரா.நிவாஷினி (27). வழக்கறிஞர். இவரது கணவர் ராம்ஜீ டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த திருப்பதி, தனக்கு ஜாமீன் வாங்கித் தராத நிவாஷினி மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அக்.3ம் தேதி துறையூர் வந்த நிவாஷினியை திருப்பதி வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நிவாஷினி அளித்த புகாரின் பேரில், துறையூர் போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருப்பதியை நேற்று முன்தினம் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனர்.
» திருப்போரூர் காவலாளி கொலை வழக்கில் கொலையாளி கைது
» போலியான மின்னஞ்சல் அனுப்பி சென்னை தனியார் நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி