விருத்தாச்சலம் எம்எல்ஏ-வை மிரட்டிய டிஎஸ்பி பணியிட மாற்றம்!

By என். முருகேவல்

விருத்தாசலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேரணி நடத்த முயன்ற விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸாருக்கு அனுமதி மறுத்து, மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, விருத்தாசலம் டிஎஸ்பி கிரியா சக்தி, கோவை கண்காணிப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை ஒட்டி விருத்தாசலம் கடை வீதியில் உள்ள இருவரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அமைதிப் பேரணி சென்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்காக வந்திருந்த விருத்தாசலம் டிஎஸ்பி கிரியாசக்தி, அமைதிப் பேரணிக்கு அனுமதியில்லை எனக் கூறி, பேரணியை தடுத்து நிறுத்தினார். அப்போது அவருக்கும், டிஎஸ்பி கிரியாசக்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், டிஎஸ்பி கிரியா சக்தி, எம்எல்ஏ மீது வழக்குப் போடுவேன் எனவும், வழக்குப் போட்டால் அடுத்த முறை தேர்தலில் நிற்க முடியாது என மிரட்டுவதாகவும் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார்.

இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக அவர் கோவை மாவட்ட கண்காணிப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாயின. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “பணியிட மாற்றத்துக்கும் எம்எல்ஏ சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் கும்முடிபூண்டியில் இருக்கும்போது எனது கோவை பணியிட மாற்றத்திற்கு விருப்பம் தெரிவித்திருந்தேன். நிர்வாக நடைமுறையில் அடிப்படையில் பணியிடமாற்றம் பெற்றுள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE