மாவட்ட வருவாய் அலுவலர் என கூறி கோடிக்கணக்கில் பண மோசடி: நெல்லையில் போலீஸ் ஏட்டு, பெண் கைது

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: மதுரையைச் சேர்ந்தவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் என்று சொல்லி பண மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த தலைமைக் காவலரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ் ( 41). திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம ஓசூர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி( 40) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வளர்மதிக்கு திருநெல்வேலியிலேயே வாடகைக்கு வீடும் எடுத்து கொடுத்துள்ளார் முருகராஜ்.

முருகராஜ் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக வளர்மதியைப் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அதன்படி சமீப காலமாக வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் என்று கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். நிலத்துக்கு பட்டா வாங்கித் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி இவர்கள் இருவரும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சசிகுமார் (40) என்பவருக்கு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கித் தருவதாக வளர்மதி கூறியுள்ளார்.

இதை நம்பி ரூ.10 லட்சத்தை சசிகுமார் கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் பட்டா செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து வளர்மதியிடம் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்காததால் முருகராஜிடம் விஷயத்தைச் சொல்லியுள்ளார் சசிகுமார். இதையடுத்து முருகராஜ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சசிகுமாருக்கு கொடுத்துள்ளார். சசிகுமார் அதை தனது வங்கி கணக்கில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பியுள்ளது.

இதைதொடர்ந்து சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, வளர்மதி போலி மாவட்ட வருவாய் அலுவலர் என்பதும், தலைமைக் காவலர் முருகராஜுடன் சேர்ந்து அவர் தன்னிடம் ரூ.10 லட்சத்தை மோசடி செய்ததும் சசிகுமாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சந்திப்பு காவல் நிலையத்தில் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் விசாரணை நடத்தினார். இதில், வளர்மதி மற்றும் முருகராஜ் ஆகியோர் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகராஜும் வளர்மதியும் இன்று கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE