சென்னை | போதைப் பொருள் விற்பனை: யோகா மாஸ்டர், வங்கி ஊழியர் கைது

By KU BUREAU

சென்னை: சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக யோகா மாஸ்டர், வங்கி ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் அருகே போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக தியாகராய நகர் துணை ஆணையரின் தனிப்படை போலீஸாருக்கு நேற்று முன்தினம் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் வாடிக்கையாளர் போல பேசி அந்த இடத்துக்குச் சென்றனர்.

வாடிக்கையாளர்கள் போல பேசி கோவூரை சேர்ந்த யோகா மாஸ்டர் ராஜேஷ் குமார் (27), தனியார் வங்கியில் பணியாற்றும் சாலிகிராமத்தைச் சேர்ந்த சாய் பாலாஜி (26) ஆகிய இருவரையும், தங்கள் இடத்துக்கு வரவழைத்து போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன், 13 ஊசிகள், 6 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜேஷ் குமார் என்பவர் பெங்களூருவில் இருந்து நண்பர் அருண்மூலமாக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒரு கிராம்4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்துசெல்போன் செயலி மூலம் தனக்கு நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் சென்னையில் பல இடங்களில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த செயலிமூலம் அறிமுகமான சாய் பாலாஜியை முதலில் பிடித்து, அவரிடமிருந்து ஒரு கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றியதாகவும், பின்னர் அவரைசெல்போனில் பேச வைத்து ராஜேஷ்குமாரை வரவழைத்து அவரையும் கைது செய்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த கும்பலின் சங்கிலித் தொடர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE