காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது ரவுடியை சுட்டு பிடித்த போலீஸார் @ திண்டுக்கல்

By KU BUREAU

திண்டுக்கல்: கொலை சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி நேற்றுகாவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது, திண்டுக்கல் போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த திமுக நகர மாணவரணி நிர்வாகி பட்டறை சரவணன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக இர்பான் (24) என்பவரை, கடந்த செப். 28-ம்தேதி மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஒரு கும்பல் வெட்டிக் கொலைசெய்தது.

இந்நிலையில், கொலையில் தொடர்புடைய முத்தழகுபட்டி எடிசன் சக்கரவர்த்தி (24), மார்ட்டின் நித்திஷ் (23), ரிச்சர்ட் சச்சின் (25) மற்றும் மாரம்பாடி பிரவீன் லாரன்ஸ் (29) ஆகிய 4 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக, முக்கியக் குற்றவாளியான ரிச்சர்ட் சச்சினை, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீஸார், மாலப்பட்டி சுடுகாடு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காண்பித்த ரிச்சர்ட் சச்சின், திடீரென அரிவாளால் காவலர் அருண்பிரசாத்தை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்ப முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், தனது துப்பாக்கியால் ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த ரிச்சர்ட்சச்சின் மயங்கி விழுந்தார். காயமடைந்த காவலர் அருண்பிரசாத் மற்றும் ரிச்சர்ட் சச்சின் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு நடந்த மாலப்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற சென்ற இடத்தில், காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பமுயன்ற குற்றவாளி ரிச்சர்ட் சச்சினை, காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் துப்பாக்கியால் காலில் சுட்டார். தற்போது சிகிச்சை பெற்று வரும் காவலர் அருண்பிரசாத் மற்றும் குற்றவாளி ரிச்சர்ட் சச்சின் ஆகியோர் நலமாக உள்ளனர்" என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE