திண்டுக்கல்லில் பழிக்குப் பழியாக கொலை: 4 பேர் கைது; 2 பேர் சரண்

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சில தினங்களுக்கு முன்பு பழிக்குப் பழியாக நடந்த கொலையி்ல், 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் நீதிமன்றத்தில் 2 பேர் சரணடைந்தனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த திமுக நிர்வாகி பட்டறை சரவணன். இவர் கடந்த ஆண்டு ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக, பட்டறை சரவணன் கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பேகம்பூரைச் சேர்ந்த இர்பான் என்பவரை, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே செப்டம்பர் 28-ம் தேதி ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய முத்தழகுபட்டியைச் சேர்ந்த எடிசன் சக்கரவர்த்தி (24), மார்ட்டின் நித்திஷ் (23), ரிச்சர்டு சச்சின் (25) மற்றும் மாரம்பாடியைச் சேர்ந்த பிரவீன் லாரன்ஸ் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும். இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்த ஜெயபால் மகன்கள் எடிசன்ராஜ் (24), இவரது தம்பி சைமன் செபாஸ்டின் (22) ஆகிய இருவரும், திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி முன் சரணடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE