அரகண்டநல்லூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இன்று மாலை மீன் பிடிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த தர்மா என்பவர் வலை வீசியுள்ளார். அப்போது வலை கனமாக இருந்ததால் நிறைய மீன்கள் சிக்கி இருப்பதாக நினைத்து மகிழ்ச்சியுடன் அந்த மீனவர் வலையை இழுத்துள்ளார். அப்போது வலைக்குள் இரண்டு சிறுவர்களின் உடல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மீனவர், உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அரகண்டநல்லூர் போலீஸார், கோட்டமருதூர் ஏரிக்கு விரைந்து சென்று பார்த்த போது மீனவர் வீசிய வலையில் சிக்கியிருந்த இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மனம்பூண்டியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன்களான ஜீவிதன்(10), தர்ஷன்(8) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டது.

இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர், தங்களது மகன்களுடன் மேலும் ஒரு சிறுவனும் காலையிலேயே விளையாட வந்ததாக தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் ஏரிக்குள் இறங்கி தேடினர். அப்போது மனம்பூண்டியைச் சேர்ந்த ஸ்ரீதரன் மகன் ஹரிஹரன்(11) என்ற மேலும் ஒரு சிறுவனின் உடல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து அரகண்டநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வழக்கமாக காலையில் விளையாட செல்லும் தங்களது பிள்ளைகள் மாலையில் வீட்டிற்கு வந்து விடுவார்கள் என நினைத்திருந்த பெற்றோர்களுக்கு ஏரியில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்துள்ள பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE