கோவை மாநகர கவால்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை

By டி.ஜி.ரகுபதி

கோவை: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில், காவல்துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.3) கோவையில் நடந்தது. இக்கூட்டத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் (விசாரணைப் பிரிவு) அஜய் பட்நாகர் தலைமை வகித்துப் பேசினார்.

இந்நிகழ்வில், தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொண்டு பேசினார். மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் பரத் லால், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாகவும், காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இன்று நண்பகலில் வந்தார். அவரை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர். மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் அஜய் பட்னாகர், செயலாளர் பரத் லால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், போலீஸாரின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடந்தது. இதில், காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி-யான செந்தில்குமார், துணை ஆணையர்கள் ஸ்டாலின், சரவணக்குமார், சுஹாசினி, அசோக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE