ஹைதராபாத்: ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பணியாற்றிய அசாருதீன், தனது பதவிக்காலத்தில் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அசாருதீனுக்கு அனுப்பப்பட்ட முதல் சம்மன் இதுவாகும்.
ஹைதராபாத் உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்காக டீசல் ஜெனரேட்டர்கள், தீயணைப்பு சாதனங்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடியை முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணமோசடி வழக்கில், 2023 அக்டோபரில் அசாருதீன் மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க முன்னாள் அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அசாருதீன், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய் குற்றச்சாட்டு என்றும், இது தனது நற்பெயரைக் கெடுக்க நடத்தப்படும் நாடகம் என்றும் கூறினார். நவம்பர் 2023 இல், ஹைதராபாத் நீதிமன்றம் அவருக்கு இந்த வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கியது.
» அமைச்சர் பங்கேற்ற கிராமசபை கூட்டத்தில் கோரிக்கைகளை பேசிய சிறுவர்கள்!
» பாலியல் ரீதியாக மாணவிகளிடம் பேசிய தனியார் பள்ளி ஆசிரியர் மீது வழக்குப் பதிவு