சென்னை: கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2,950 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தீயிலிட்டு அழித்தனர்.
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்வோரை தமிழக காவல்துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தமிழகம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், போதைப் பொருள் கடத்துதல், பதுக்குதல், விற்பனை செய்தது தொடர்பாக 89 வழக்குகளில் 2,950 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இவற்றை அழிக்க போலீஸார் முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் அனுமதிபெற்று, போதைப் பொருள் ஒழிப்பு குழுமத்தின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் பகுதியில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார்கடந்த 30-ம் தேதி தீயிலிட்டு அழித்தனர். 2024-ம் ஆண்டில் மட்டும்இதுவரை 12,800 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் மற்றும் மனமயக்க பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவலை ‘10581’ என்ற கட்டணமில்லா உதவி எண்ணிலோ, 9498410581 என்ற வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் தெரிவித்துள்ளார்
» சரக்கு ரயிலில் கொக்கி உடைந்து இன்ஜின், பெட்டி பிரிந்தது: இரண்டரை மணி நேரம் மக்கள் அவதி
» இந்தியா முழுவதும் மது ஒழிக்க வேண்டும்: ஆளுநருக்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி கருத்து