140 போலி தங்க காசுகளை கொடுத்து ரூ.36 லட்சம் பறிக்க முயற்சி - விழுப்புரம், கடலூரை சேர்ந்த 6 பேர் கைது

By KU BUREAU

திருவண்ணாமலை: செங்கத்தில் 140 போலி தங்க காசுகளை கொடுத்து ரூ.36 லட்சத்தை பறிக்க முயன்ற விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் பகுதியில் வசிப்பவர் லாரி உரிமையாளர் சீனிவாசன்(43). இவரிடம், புதையலில் 140 தங்க காசுகள் கிடைத்ததாகவும், ரூ.36 லட்சம் கொடுத்தால் தருவதாகவும் கூறி ஒரு கும்பல் அணுகியது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிக்கு வருமாறு தெரிவித்துள்ளது. இக்கும்பலிடம் ஏற்கெனவே ஏமாற் றமடைந்ததால், திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் சீனிவாசன் புகார் தெரிவித்தார். அதன்பேரில், தனிப்படை காவல்துறையினர் செங்கம் அடுத்த திருவண்ணாமலை - பெங்களூரு புறவழிச்சாலையில் கோணாங்குட்டை பகுதியில் ரகசிய கண்காணிப்பில் நேற்று முன் தினம் இரவு ஈடுபட்டனர்.

அப்போது பணம் இருப்பது போன்ற பெட்டியுடன் சீனிவாசன் காத்திருக்க, அவரிடம் தங்க காசுகள் இருப்பதாக கூறிய கும்பல் காரில் வந்து இறங்கி, பெட்டியை பெற முயற்சித்தது. இதையறிந்த தனிப்படையினர், கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், விழுப்புரம் மாவட்டம் அம்மணங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் தர்மலிங்கம் தலைமையிலான கும்பல் 140 போலி தங்க காசுகளை கொடுத்து, ரூ.36 லட்சத்தை பறிக்க முயன்றது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, தர்மலிங்கம் தலைமை யிலான கும்பல் மீது தமிழகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலத்திலும் கைவரிசை காட்டியுள்ளனர்.

இக்கும்பலிடம் ஏற்கெனவே ரூ.4 லட்சம் கொடுத்து சீனிவாசன் ஏமாற்றமடைந்துள்ளார்” என்றனர். இது குறித்து செங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விழுப்புரம் மாவட்டம் அம்மணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் (67), சத்தியராஜ் (24), அருள்முருகன் (45), வெங்கடேசன் (24), கடலூர் மாவட்டம் கொடைக்கல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (48), நாகவள்ளி (39) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 140 போலி தங்க காசுகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். செங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போலி தங்க காசுகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE