நாமக்கல்: வடமாநில கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரிடம், குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார்.
கேரள மாநிலத்தில் உள்ள வங்கி ஏடிஎம்மில் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பல் கன்டெய்னர் லாரியில் கடந்த 27-ம் தேதி குமாரபாளையம் அருகே தப்ப முயன்றபோது, போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவன் உயிரிழந்தார்.
6 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் காயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக வெப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரிடம் நேற்று விசாரணை நடத்தினார்.
» திருப்பூர் பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கொலை - 19 வயது உரிமையாளர் கைது
» செஞ்சி மஸ்தான் நீக்கம் ஏன்? - அமைச்சர் பதவி ‘உள்ளரசியல்’ பின்புலம்
அப்போது, சம்பவம் எப்படி நடந்தது. எதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பாக நீதிபதி மாலதி, காவல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி பதிவு செய்தார்.