சென்னை | தம்பி, நண்பர் கடத்தப்பட்டதாக மதுபோதையில் போலீஸாரை அலையவிட்ட இளைஞர்

By KU BUREAU

சென்னை: தம்பி மற்றும் நண்பரை கடத்தல் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுவிட்டதாக, மதுபோதை இளைஞர் ஒருவர் போலீஸிடம் கூறி அவர்களை அலையவிட்ட சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை கோயம்பேடு, பழச்சந்தையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு, தனது தம்பி மற்றும் நண்பரை இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்றுவிட்டதாக கூறி, கதறி அழுது கொண்டிருந்தார். தகவல் அறிந்து கோயம்பேடு காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று, அழுதுகொண்டிருந்த இளைஞரிடம் விசாரித்தனர்.

இதில், அவரது பெயர் மோகன் என்பதும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் கோயம்பேடு சந்தையில், தங்கி அங்கேயே கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்டது யார் என மோகனிடம் போலீஸார் கேட்டபோது, அவர் குழப்பமாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த போலீஸார், உடனடியாக கோயம்பேடு சந்தை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட மோகனுடன் 4 பேர் டாஸ்மாக் மதுபானக் கடையிலிருந்து மது அருந்திவிட்டு வெளியே வருவதுதெரியவந்தது. இதை அடிப்படையாக வைத்து மேலும் விசாரித்தபோது, தனது தம்பி கோகுல், நண்பர் பிரேம் ஆகியோரைத்தான் கடத்தல் கும்பல் கடத்திச் சென்றுவிட்டதாக மோகன் தெரிவித்துள்ளார். அவர்களை தேடியபோது, இருவரும் கோயம்பேடு சந்தை பகுதியில் மதுபோதையில் படுத்திருந்தது தெரியவந்தது.

இதன் பின்னர்தான் கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பதும், மோகன் மதுபோதையில் இவ்வாறு செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தவறான தகவல் கொடுத்தமோகனை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE