பரமக்குடி அருகே தண்டவாளத்தில் கிளிப்புகளை கழற்றிய சம்பவம் - சத்தீஸ்கர் தொழிலாளர்கள் 2 பேர் கைது

By இ.ஜெகநாதன்

மானாமதுரை: பரமக்குடி அருகே தண்டவாளத்தில் 420 கிளிப்புகளை கழற்றிய சம்பவத்தில் சட்டீஸ்கர் தொழிலாளர்கள் 2 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சூடியூர் இடையே செப்.16-ம் தேதி தண்டவாள பராமரிப்பாளர் (கீ மேன்) செந்தில்குமார் தண்டவாளத்தை ஆய்வு செய்தார். அப்போது தண்டவாளம் அசையாமல் இருக்க பொருத்தப்பட்டிருந்த 420 கிளிப்புகள் கழன்று கிடந்தன. அவர் கொடுத்த தகவலை அடுத்து அவ்வழியாக வந்த ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் கிளிப்புகளை பொருத்திய பின்னர் தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் தண்டவாள பராமரிப்பு பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்து இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறது. அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திப்பனூர் அருகே தங்கி பரமக்குடி, மானாமதுரை பகுதிகளில் பணி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சொன்னதை விட குறைவான ஊதியமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சிலர் ஒப்பந்த நிறுவனத்தை மாட்டி விடுவதற்காக தண்டவாள கிளிப்புகளை கழற்றியது தெரியவந்தது. இதையடுத்து சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த சுரேஸ்அகரியா (24), நித்தேஸ்குமார் (21) ஆகிய இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE