மாங்காடு அருகே அடக்கம் செய்யப்பட்ட நபரின் மரணத்தில் சந்தேகம்: உடலை தோண்டி பிரேத பரிசோதனை

By இரா.நாகராஜன்

பூந்தமல்லி: மாங்காடு அருகே இறந்து அடக்கம் செய்யப்பட்ட தம்பியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் அளித்த புகார் காரணமாக மயானத்தில் புதைக்கப்பட்ட உடல், இன்று தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

மாங்காடு அருகே மதனந்தபுரம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ராம்ராஜ் (36), இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு சஷ்டிராம் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளார்.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி காலை வீட்டில் ராம்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது மனைவி, தன் உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த உறவினர்கள், வீட்டின் படுக்கையறையில் ராம்ராஜ் இறந்து கிடந்ததை அறிந்து, அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, சங்கீதாவின் உறவினர்கள், ராம்ராஜ் உடலுக்கு இறுதி சடங்கு செய்து மதனந்தபுரம் மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், ராம்ராஜ் அண்ணன் ராஜீவ்காந்தி, தன் தம்பி ராம்ராஜ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு காவல்நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸாரின் முன்னிலையில், இன்று மதனந்தபுரம் மயானத்தில் புதைக்கப்பட்ட ராம்ராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, மயானத்திலேயே சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ராம்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்குட்படுத்தினர்.

ராம்ராஜ் இயற்கை மரணமடைந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து, இரு நாட்களுக்கு பிறகு வரும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும். ஆகவே, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE