வத்திராயிருப்பு அருகே ஆட்டோ ஓட்டுநர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

By அ.கோபால கிருஷ்ணன்

விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் லோடு ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் திங்கட்கிழமை மாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி சர்ச் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் முத்துக்குமார்(26). இவரது மனைவி மாலதி(24). இவர்களுக்கு 3 மற்றும் 1 வயதில் இரு மகள்கள் உள்ளனர். முத்துக்குமார் லோடு ஆட்டோ ஓட்டுநர் வேலை செய்து வந்தார்.

திங்கள் கிழமை மாலை கூமாபட்டி ஊரணி தெரு பகுதியில் உள்ள தோட்டத்தில் முத்துக்குமார் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து வந்த கூமாபட்டி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதத்தில் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கூமாபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். முத்துக்குமார் மீது கூமாபட்டி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

விருதுநகர் எஸ்பி கண்ணன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும் குற்றவாளிகளை பிடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து எஸ்பி உத்தரவிட்டார். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் கூமாபட்டி ராமசாமியாபுரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க கூமாபட்டி பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE