கோவை: கோவையை அடுத்த நரசிபுரம் பகுதியில் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த தொழிலாளி சந்திரன் (47) யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியை ஒட்டிய தொண்டாமுத்தூர், நரசிபுரம், மருதமலை, தடாகம் ஆகிய பகுதிகளில் யானை உள்ளிட்ட வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தொண்டா முத்தூரை அடுத்த நரசிபுரம் கிராம பகுதியில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை, தர்மராஜா கோயில் வீதியில் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த கூலி தொழிலாளி சந்திரன் (47) என்பவரை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனே அங்கு வந்த வனத்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "தொண்டாமுத்தூர், நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் யானை தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். எனவே குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
» ‘45 நாட்களாக தூக்கம் இல்லை’ - பணி அழுத்தம் காரணமாக பஜாஜ் நிறுவன ஊழியர் தற்கொலை!
» திமுக நிர்வாகி கொலை வழக்கு விசாரணை: திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு