திமுக நிர்வாகி கொலை வழக்கு விசாரணை: திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திண்டுக்கல் மாநகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பட்டறை சரவணன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் ஒருவர் வேலூர் சிறையில் உள்ளார். மீதமுள்ள எட்டு பேர் ஜாமீனில் இருந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராக இருந்தனர். இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு இவ்வழக்கில் தொடர்புடைய இர்பான், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மேலும் ஒருவருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டியதில் ஒருவர் கொலையானது. மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வரும் போது அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனால், நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் பைகளை கொண்டுவந்தவர்களின் உடைமைகள் என அனைத்தும் போலீஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனால் திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE