இளம்பெண்ணின் தலையில் ஊசியை மறந்து வைத்து தையல் போட்ட மருத்துவர்: அரசு மருத்துவமனை அதிர்ச்சி

By KU BUREAU

உத்தரப்பிரதேசம்: ஹபூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 18 வயது இளம் பெண்ணின் தலையில் அறுவை சிகிச்சை ஊசியை வைத்து மருத்துவர் தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹபூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட மோதலின் போது தலையில் காயம் ஏற்பட்டதால், சிதாரா சமூக நல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தலையில் தையல் போட வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். மருத்துவரும், சுகாதாரப் பணியாளர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு தையல் போட்டு, தலையில் கட்டுக் கட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு திரும்பிய அந்த பெண் வலியால் துடிக்க ஆரம்பித்தார். இதனால் குடும்பத்தினர் அந்த பெண்ணை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் காயத்தை பரிசோதனை செய்ததில் தலையின் உள்ளே ஊசி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து அந்த ஊசியை அகற்றினார்கள்.

அறுவை சிகிச்சையின்போது அரசு சமூக நல மையத்தின் மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். "இதை யாரும் எளிதாக கடந்து செல்ல கூடாது. இதில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார். மேலும், அந்தப் பெண்ணின் தாய், தன் மகளின் தலையில் இருந்து எடுக்கப்பட்ட ஊசியை அனைவரிடமும் காட்டினார்.

ஹபூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் சுனில் தியாகி, “சமூக சுகாதார மையத்தில் நடந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியும். இதற்காக இரண்டு பேர் கொண்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக குடும்பத்தினரின் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, "இந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர் குடிப்பதே இல்லை" என்று அவர் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE