கோயிலில் தூங்கிய பூசாரியை அடித்துக்கொன்ற சிறுத்தை - 11 நாட்களில் 7 பேர் மரணம் 

By KU BUREAU

ராஜஸ்தான்: உதய்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுத்தை தாக்குதலில் கோயில் பூசாரி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கடந்த 11 நாட்களில் சிறுத்தை தாக்குதலில் இப்பகுதியில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

உதய்பூரிn கோகுண்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் பூசாரியை சிறுத்தை அடித்துக் கொன்றது. மகாராஜ் விஷ்ணு கிரி எனும் அந்த பூசாரி நேற்று இரவு கோயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது சிறுத்தையால் தாக்கப்பட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கோகுந்தா காவல் நிலையத்தின் காவல் நிலையப் பொறுப்பாளர் ஷைட்டன் சிங் கூறினார்.

காடுகளின் நடுவில் இருந்து பலியானவரின் உடலை போலீசார் மீட்டெடுப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காட்டை சுற்றி கிராம மக்கள் திரண்டிருப்பதை வீடியோ காட்டுகிறது.

சிறுத்தையை பிடிப்பதற்காக போலீஸார், வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, பல இடங்களில் பொறி வைத்தனர். கடந்த சில நாட்களாக சில சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், சிறுத்தை தாக்குதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சிறுத்தை தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பல பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் மாலை நேரங்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், குழுவாக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என சமூக வலைதளங்கள் மூலம் போலீஸார் எச்சரித்துள்ளனர். கிராம மக்கள் வெளியே செல்லும்போது குச்சிகள் அல்லது பிற பொருட்களை பாதுகாப்புக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE