சாலையோரமாக நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து... உடல் நசுங்கி ஓட்டுநர் பலி!

By சந்திரசேகர்

நத்தம் - மதுரை நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநர், சம்பவ இடத்தில் பலியானார்.

நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள பெருமாள்பட்டி அருகே நான்கு சாலையின் இடையில் அமைக்கப்பட்ட தடுப்புகளின் இடையே அழகு செடிகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அழகுச் செடிகளை IVLR எனும் மதுரை-நத்தம் நான்குவழி சாலை அமைத்துக் கொடுத்த நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்நிலையில் பெருமாள்பட்டி பகுதியில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி நடைபெற்று வந்தது. மதுரையைச் சேர்ந்த உஷாலட்சுமி என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான டெம்போ சரக்கு வாகனத்தை சென்னையில் இருந்து மதுரை நோக்கி மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டியன் ஒட்டி வந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர்

அப்போது தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த டேங்கர் லாரியின் பின்பக்கமாக, பாண்டியன் ஓட்டி வந்த சரக்கு வாகனம் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பாண்டியன் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் போலீஸார் தீயணைப்புத் துறையுடன் இணைந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் டெம்போ சரக்கு வாகனத்திலிருந்து இருந்து பாண்டியனின் உடலை மீட்டனர். பின்னர், நத்தம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற சாலை விபத்தை பார்க்க அப்பகுதியில் மக்கள் கூடியதால் அப்பகுதியை பரபரப்பாக காணப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE