பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தொழிலாளர் அடித்துக் கொலை; உறவினர்கள் சாலை மறியல்

By காமதேனு

பொள்ளாச்சியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 2 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.சந்திராபுரம் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 13ம் தேதி மணிகண்டன், சூரிய பிரகாஷ், அருண் ராஜ் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், சூரிய பிரகாஷ், அருண்ராஜ் ஆகிய இருவரும் மணிகண்டனை வலுவாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அருண்ராஜ், சூரிய பிரகாஷ்

இந்நிலையில் படுகாயமடைந்த மணிகண்டன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் கோவை மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். இதையடுத்து சூரிய பிரகாஷ், அருண்ராஜ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள், கைது செய்யப்பட்ட இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும என கூறி உடுமலை - ஊஞ்சவேலம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மணிகண்டனின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி தாலுகா போலீஸார் விசாரணை

இதற்கிடையே கைது செய்யப்பட்ட சூரிய பிரகாஷ், அருண்குமார் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு, கல்குவாரியில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே, இவர்கள் இருவரையும் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவில் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE