குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் வ.உ.சி. கொள்ளுப்பேரன் என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக அருவிகள், ஆறுகளில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் நேற்று முன்தினம் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த திருநெல்வேலி, என்ஜிஓ காலனியைச் சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன் அஸ்வின், சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் என்ற தகவல் வெளியாகி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதி, விடுமுறையில் இருந்த அஸ்வின் சமீபத்தில் தென்காசி மேலகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அஸ்வினின் தந்தை குமார் வங்கியில் வேலை பார்த்து வருவதாகவும், தற்சமயம் மகனின் இறப்பு காரணமாக குடும்பத்தினர் சோகத்தில் இருப்பதால் இது தொடர்பாக எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது, வ.உ.சி. கொள்ளுப் பேரன் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.